மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "இன்று, மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் எங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை; சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் அழுத்தத்தின் பேரில் மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து பின்வாங்கியதா? எப்போதும் போல மோடி அரசு மீண்டும் தனது வாக்குறுதியை மீறப் போகிறதா? நாட்டின் 90% மக்களை மீண்டும் ஒருமுறை நரேந்திர மோடி ஏமாற்றப் போகிறாரா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொடர்ச்சியான அழுத்தத்துக்குப் பிறகு, மோடி அரசு கடந்த ஏப்ரல் 30, 2025 அன்று சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்தது. இருப்பினும், தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்குவது நரேந்திர மோடியின் வழக்கமாக இருந்து வருகிறது. அவரது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே எப்போதும் வேறுபாடு உள்ளது.

ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நோக்கம். இது நாட்டுக்கு சமூக, பொருளாதார நீதியை வழங்குவதற்கான முதல் படியாகும். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார். நரேந்திர மோடியும் பாஜகவும் எவ்வளவு சதித்திட்டங்களைச் செய்தாலும், என்ன விலை கொடுத்தாவது சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வோம். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தங்கள் உரிமைகளையும் நீதியையும் பெறுவதை உறுதி செய்வோம். இதை நரேந்திர மோடி நினைவில் கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in