அகமதாபாத் விமான விபத்து: மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நாளை ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்து: மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நாளை ஆலோசனை

Published on

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை(ஜூன் 17) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர், குஜராத் அரசின் பிரதிநிதி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிகாரிகள், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். விபத்து குறித்து ஆய்வு செய்வது, தற்போது நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை மதிப்பிடுவது, அதை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து இக்குழு ஆராயும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, விமான விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக விபத்துக்குள்ளான விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் நிபுணர் குழுவினர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிபுணர்கள் அகமதாபாத் வந்துள்ளனர். விமானி தரப்பில் பிழை நேர்ந்ததா, பராமரிப்பில் தவறு நிகழ்ந்ததா, பறவை மோதல் காரணமா என்பது போன்ற கோணங்களோடு, விமானத்தின் எஞ்சின் உந்துதல், இறக்கைகள் மற்றும் தரையிறங்கும் கியர் ஆகியவை தொடர்பாக ஆய்வில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விமான விபத்து காரணமாக, அடுத்த வாரம் நடைபெறும் பாரிஸ் விமானக் கண்காட்சியில் இருந்து போயிங் நிறுவனம் விலகிவிட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெல்லி ஆர்ட்பெர்க், “விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நாங்கள் எங்கள் குழுவுடன் இருக்க விரும்புகிறோம். மேலும், எங்கள் வாடிக்கையாளர் மற்றும் விசாரணையில் கவனம் செலுத்த விரும்புகிறோம். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் இந்திய விசாரணை அமைப்பின் விசாரணையை போயிங் குழு ஆதரிக்கத் தயாராக உள்ளது.” என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in