குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அஞ்சலி

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அஞ்சலி
Updated on
2 min read

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறத் தொடங்கியது. இதில், இதுவரை 92 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 47 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதில், விஜய் ரூபானியின் உடலும் அடக்கம் என்று அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கூடுதல் கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னீஷ் படேல் தெரிவித்துள்ளார். மீதமுள்ள உடல்களின் டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் ரூபானியின் உடல் உள்ள சவப் பெட்டியின் மீது மூவர்ணக்கொடி போற்றப்பட்டு, காவலர்கள் சுமந்து வந்தனர். உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ரிஷிகேஷ் படேல், ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்.

விஜய் ரூபானியின் மனைவியும் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, விஜய் ரூபானியின் உடல் அங்கிருந்து ராஜ்கோட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

47 உடல்கள் ஒப்படைப்பு: அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படாத உடல்கள், உறவினர்களின் வருகைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்த டாக்டர் ரஜ்னீஷ் படேல், "சிவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட உடல்களில் 92 உடல்கள்களின் டிஎன்ஏ பொருத்தம் முடிக்கப்பட்டுள்ளது. இதில், 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) இரவுக்குள் மேலும் 2 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) 13 குடும்பங்கள் உடல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் டாக்டர் படேல் கூறினார். 21 பேரின் உடல்கள், அவர்களின் உறவினர்களுடன் மேலும் ஆலோசனை நடத்திய பிறகு ஒப்படைக்கப்படும்.

இதுவரை, அகமதாபாத்தைச் சேர்ந்த 12, பரோடாவைச் சேர்ந்த ஐந்து, மெஹ்சானா மற்றும் ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்த தலா நான்கு, கெடா மற்றும் பருச் மாவட்டத்தைச் சேர்ந்த தலா இரண்டு, உதய்பூர், ஜோத்பூர், போடாட் மற்றும் ஆரவல்லியைச் சேர்ந்த தலா ஒன்று உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடலும் முழு கண்ணியத்துடன் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in