குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு
Updated on
2 min read

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதி சடங்கு இன்று அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. மேலும், குஜராத் அரசு இன்று (திங்கட்கிழமை) மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் இறந்துவிட்டதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது. மேலும், விமானம் மோதியதில் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் பலரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், நேற்று விஜய் ரூபானியின் உடன் டிஎன்ஏ சோதனை மூலமாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 16) ராஜ்கோட்டில் உள்ள ராம்நாத்பாரா தகனக்கூடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபானிக்கு குஜராத் அரசு திங்கட்கிழமை மாநில துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. 400க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் இந்த இறுதி சடங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.

டிஎன்ஏ சோதனை: விமான விபத்து நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, டிஎன்ஏ பொருத்துதல் மூலம் இதுவரை 87 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து 47 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் குஜராத்தின் பருச், ஆனந்த், ஜூனாகத், பாவ்நகர், வதோதரா, கேடா, மெஹ்சானா, அர்வல்லி மற்றும் அகமதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று பிஜே மருத்துவமனையின் கூடுதல் சிவில் கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விமான விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியோ அல்லது வேறுவிதமாக சேதமடைந்தோ இருந்ததால், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை கண்டறிய அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இழப்பீடு: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உயிர் பிழைத்தவருக்கும் உடனடி நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் வகையில், தலா ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்தது.

இதுகுறித்த ஏர் இந்தியாவின் அறிக்கையில், ‘சமீபத்திய விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா துணையாக நிற்கிறது. எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, உடனடி நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் வகையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் உயிர் பிழைத்தவருக்கும் ஏர் இந்தியா ரூ. 25 லட்சம் அல்லது தோராயமாக 21,000 ஜிபிபி (கிரேட் பிரிட்டன் பவுண்ட்) இடைக்கால இழப்பீட்டை வழங்கும். இது டாடா சன்ஸ் ஏற்கெனவே அறிவித்த ரூ.1 கோடி அல்லது தோராயமாக 85,000 ஜிபிபி இழப்பீட்டுக்கு கூடுதலாகும்’ எனத் தெரிவித்தது.

உயர் மட்ட குழு: மத்திய உள்துறை செயலாளர் தலைமையிலான உயர் மட்ட ஒழுங்கு குழு, அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு வழிவகுத்த காரணங்களை ஆராயும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க விரிவான வழிகாட்டுதல்களையும் பரிந்துரைக்கும். மேலும் மூன்று மாதங்களில் இதன் அறிக்கை வெளியாகும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in