Last Updated : 16 Jun, 2025 10:57 AM

 

Published : 16 Jun 2025 10:57 AM
Last Updated : 16 Jun 2025 10:57 AM

‘இன்ஃப்ளூயன்சர்களே... தயவுசெய்து நிறுத்துங்கள்!’ - விமான விபத்தில் உறவுகளை இழந்தோர் வேண்டுகோள்

கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத் நகரில் நிகழ்ந்த விமான விபத்தில் சுமார் 270 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விமானத்தில் பயணித்து உயிரிழந்த மருத்துவர் கோமி வியாஸின் உறவினரான குல்தீப் பாட் என்பவர் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

“எங்களை போலவே இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான தருணம். இந்த சூழலில் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் தங்கள் பக்கத்துக்கு லைக்ஸ், வியூஸ் மற்றும் ஃபாலோயர்களை அதிகரிக்க செய்யும் வகையில் விபத்து சார்ந்த படங்கள், வீடியோக்களை பயன்படுத்துகின்றனர்.

சிலர் அதை மாற்றி அமைத்தும் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்கின்றனர். இந்தியாவில் இருந்து லண்டனுக்கு செல்வதற்கு முன்பாக கோமி தனது கணவர், பிள்ளைகளுடன் எடுத்த செல்ஃபி படத்தை எங்கள் குடும்பத்தினர் உள்ள குரூப்பில் பகிர்ந்திருந்தார். அந்த படத்தை கொண்டு இப்போது ஏஐ மூலம் வீடியோ ஜெனரேட் செய்கிறார்கள்.

நான் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களுக்கு வைப்பது ஒரே ஒரு வேண்டுகோள்தான். தயவுசெய்து இந்த போக்கை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது பக்கத்தில் லைக்குகள், ஃபாலோயர்ஸ்களையும் அதிகரிக்க வேண்டி ஏன் எங்களுக்கு இவ்வளவு வேதனையை கொடுக்கிறீர்கள்? தேசமே இந்த விபத்தால் கலங்கி நிற்கிறது. இந்த சூழலில் இன்ஃப்ளுயன்சர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதை கருத்தில் கொள்ளுங்கள்” என குல்தீப் பாட் கூறியுள்ளார்.

மருத்துவர் கோமி வியாஸ் குடும்பம்: ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவைச் சேர்ந்தவர் மருத்துவர் கோமி வியாஸ். இவரது கணவர் ப்ரதிக் ஜோஷி கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவருடன் லண்டனில் குடியேறுவதற்காக கோமி வியாஸ் அண்மையில் தனது மருத்துவர் பணியை ராஜினாமா செய்தார்.

தனது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு லண்டன் செல்வதற்காக ப்ரதிக் ஜோஷி ராஜஸ்தான் வந்தார். அங்கிருந்த அவர்கள் லண்டன் புறப்பட்டனர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் ப்ரதிக் ஜோஷி, கோமி வியாஸ், அவர்களது மூன்று குழந்தைகள் என மொத்த குடும்பமும் உயிரிழந்தனர். இதனால் அவர்களது சொந்த ஊரான பன்ஸ்வாரா சோகத்தில் மூழ்கியுள்ளது.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டன் நாட்டையும், 7 பேர் போர்ச்சுகீஸ் நாட்டையும், ஒருவர் கனடாவையும் சேர்ந்தவர்கள். இதில் விமானத்தில் பயணித்தவர்களில் இருக்கை எண் 11ஏ-வில் அமர்ந்திருந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டுமே உயிர் பிழைத்தார். அவர் அகமதாபாத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x