Published : 16 Jun 2025 08:11 AM
Last Updated : 16 Jun 2025 08:11 AM
புதுடெல்லி: ‘‘பாகிஸ்தான் அணு ஆயுத நாடாவதை தடுக்காமல் காங்கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்டது’’ என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளாார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
“காங்கிரஸின் வரலாற்று தவறு: பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறுவதற்கு இந்தியா எப்படி விட்டது’’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 1980-களில் பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதை இந்தியாவின் ‘‘ரா’’ உட்பட உளவு துறைகள் உறுதிப்படுத்தின. பாகிஸ்தான் கவுதா என்ற பகுதியில் அணுஆயுத தயாரிப்பு கூடத்தை அமைத்து வந்தது. அங்கு யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் நடைபெற்றன.
அந்த நேரத்தில் அதை தடுக்க இந்தியாவுக்கு இஸ்ரேல் உதவ முன் வந்தது. அதற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைதளமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு இந்திய ராணுவமும் ஆதரவு அளித்தது. அங்கிருந்து கவுதா பகுதியை தாக்கி அணு ஆயுத தயாரிப்பு முயற்சியை தடுக்க இந்தியாவுக்கு உதவு இஸ்ரேல் தயாராக இருந்தது.
பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறுவதற்கு முன்பே அதை தடுத்து நிறுத்தம் வலிமை இந்தியாவிடம் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தயக்கம் காட்டினார். சர்வதேச நாடுகளுக்குப் பயந்து தாக்குதல் நடத்தாமல் விட்டுவிட்டார்.
அதன்பின்னர் பிரதமரான ராஜீவ் காந்தியும், கவுதாவில் நடைபெற்ற பணிகளை தடுக்க தவறிவிட்டார். சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக தூதரக ரீதியாக பேச வேண்டும் என்று கூறிவிட்டார். கடைசியில் கடந்த 1988-ம் ஆண்டு அணுஆயுத தளங்களை பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனசிர் புட்டோ அரசுடன் ராஜீவ் காந்தி கையெழுத்திட்டார்.
அதன்பின்னர் 10 ஆண்டுகள் கழித்து 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் அணுஆயுத சோதனை நடத்தியது. இப்போது, அதிக செலவாகும் அணுஆயுத போட்டியில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மேலும், அணுஆயுதத்தை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு கார்கில் ஊடுருவல், எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் போன்றவற்றை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருகிறது. இப்போதும் கூட சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகளை தடுக்க அணு ஆயுத பலத்தை காட்டி பாகிஸ்தான் மிரட்டி வருகிறது.
வலிமையான தலைமை என்பது சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அதேநேரத்தில் தொலைநோக்கு பார்வையும் இருக்க வேண்டும். ஆனால், நல்ல வாய்ப்பை காங்கிரஸ் அரசு வீணாக்கிவிட்டது. நாட்டின் நீண்ட கால பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், குறுகிய கால தூதரக ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு செய்து கொண்டது. இவ்வாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT