Published : 16 Jun 2025 07:27 AM
Last Updated : 16 Jun 2025 07:27 AM
அகமதாபாத்: குஜராத் விமான விபத்து காட்சியை செல்போனில் தற்செயலாக படம் பிடித்த சிறுவன் தீப்பிழம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தாழ்வாக பறந்து விழுந்து தீப்பிழப்பு ஏற்பட்ட வீடியோ காட்சி உலகம் முழவதும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை செல்போனில் எடுத்தது அகமதாபாத் விமான நிலையம் அருகே வாடகை வீட்டில் குடியிருக்கும் 17 வயது சிறுவன் ஆர்யன். விமானம் அருகில் பறந்து செல்வதை தற்செயலாக படம் பிடித்துள்ளான்.
அது கீழே விழுந்து ராட்சத தீப்பிழப்பு வெளிப்பட்டதை பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான். தான் செல்போனில் பதிவு செய்த வீடியோவை அவன் முதலில் தனது சகோதரியிடம் மிரட்சியுடன் காட்டியுள்ளான். அதன்பின்பே அந்த 24 நொடி வீடியோ காட்சி உலகம் முழுவதும் வைரலாக பரவத் தொடங்கியது.
விமான விபத்தை முன்பே அறிந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் செல்போனில் படம்பிடித்த சிறுவனை போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். அவன் தனது தந்தையுடன் வந்து சாட்சியம் அளித்தான். அவன் கூறுகையில், ‘‘ விமான அருகில் பறந்து செல்வதை தற்செயலாக படம் பிடித்தேன். அது விழுந்து தீப்பிழப்பு வெளியானதை பார்த்து பயந்துவிட்டேன். இந்த வீடியோவை எனது சகோதரிதான் முதலில் பார்த்தார்.’’ என்றான். அதன்பின் ஆர்யனை அவனது தந்தையுடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
அவனது சகோதரி கூறுகையில், ‘‘விமான விபத்தை பார்த்து மிகவும் பயந்துபோன ஆர்யன் சரியாக பேச முடியாத நிலையில் இருந்தான். விமானம் நிலையம் அருகே குடியிருந்தால் ஆபத்து, வேறு இடத்துக்கு செல்லலாம் என கூறினான். எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் சரியாக தூங்காமல் இருந்தான்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT