தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்ற மகன் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்ற மகன் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டனுக்கு திரும்பி சென்றபோது மகனும் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ள பெரும் சோகமாக மாறியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 241 பேரில் லாரன்ஸ் டேனியல் கிறிஸ்டியனும் ஒருவர். இவர் லண்டனில் தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில் தந்தை இறந்ததைத் தொடர்ந்து லாரன்ஸ் இந்தியா வந்துள்ளார்.

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லாரன்ஸ் மீண்டும் மனைவியைப் பார்க்க லண்டனுக்கு திரும்பும்போது எதிர்பாராத விதமாக விமான விபத்தில் சிக்கி பலியானது அவரது குடும்பத்தாரை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் கணவன், மகன் என இரண்டு பேரையும் இழந்து தவிக்கும் தாயை ஆறுதல் சொல்லி தேற்றமுடியாமல் அந்த குடும்பம் தற்போது தவித்து வருகிறது.

இதுகுறித்து லாரன்ஸின் அம்மா ரவீனா டேனியல் கிறிஸ்டியன் கண்கலங்கியபடி கூறுகையில், “ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லாரன்ஸ் அவனது மனைவியுடன் வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வந்தான். எனது கணவர் 15 நாட்களுக்கு முன்பு இறந்ததையடுத்து லண்டனில் இருந்து இங்கு வந்தான். திரும்ப லண்டனுக்கு பிறப்படும்போது நாங்கள்தான் லாரன்ஸை வழி அனுப்பி வைத்தோம். எனது மகனை உயிரோடு பார்ப்பது அப்போதுதான் கடைசி என்பது எனக்கு அப்போது தெரியாது" என்று கதறிஅழுதபடி தெரிவித்தார்.

இதனிடையே விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சிவில் மருத்துவமனை கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் படேல் கூறுகையில், “ இதுவரை 15 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் விமான விபத்தில் பலியானவர்களுடன் ஒத்துப்போயுள்ளது. இறந்த மூன்று பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in