அகமதாபாத் விமான விபத்து: டிஎன்ஏ சோதனையில் 31 பேரின் அடையாளம் உறுதி; 12 உடல்கள் ஒப்படைப்பு

அகமதாபாத் விமான விபத்து: டிஎன்ஏ சோதனையில் 31 பேரின் அடையாளம் உறுதி; 12 உடல்கள் ஒப்படைப்பு
Updated on
1 min read

அகமதாபாத்: கடந்த வியாழக்கிமை (ஜூன்.12) அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோரின் உடல்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 31 பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 உடல்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட பலரை அடையாளம் கண்டறியும் டிஎன்ஏ சோதனை இன்னும் நடைபெற்று வருவதாக பி.ஜே. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய ரஜ்னிஷ் படேல், “தற்போது வரை மொத்தம் 31 உடல்களின் டிஎன்ஏ அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 12 உடல்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் வந்து தங்கள் உறவினர்களின் உடல்களை சேகரிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலை அடையாளம் காணும் பணி இன்னும் நடந்து வருகிறது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் அவரது டிஎன்ஏ இன்னும் பொருந்தவில்லை. அவரது உடலை அடையாளம் கண்டவுடன் பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிப்போம்.” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து பேசிய குஜராத் நிவாரண ஆணையரும் வருவாய்த் துறையின் செயலாளருமான அலோக் குமார் பாண்டே, “மாநில அரசு 11 வெளிநாட்டினரின் குடும்பங்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடல்களை குடும்பங்களுக்கு ஒப்படைக்க மொத்தம் 230 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று உடல்களை ஒப்படைக்கத் தொடங்கினோம். குடும்பங்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க, இறப்புச் சான்றிதழ்கள் சம்பவ இடத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உடலும் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும். குடும்பங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சமாளிக்க ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்களைத் தவிர, பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் வசிக்கும் மாணவர்கள் உட்பட பலர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in