மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்பு

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்பு
Updated on
1 min read

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர்கள் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி பலர் கொல்லப்பட்டனர். அங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.

போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கலவரக்காரர்கள் வன்முறைக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அனைத்து தரப்பினரும் கொள்ளையடிக்கப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இதன்படி, மைதேயி சமுதாய அமைப்பைச் (ஆரம்பை டெங்கோல்) சேர்ந்தவர்கள் 307 ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால் குகி சமுதாய அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை.

இதனிடையே, ஆரம்பை டெங்கோல் அமைப்பின் தலைவர் அசிம் கனன் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி கைது செய்யதனர். இதனால் மீண்டும் கலவரம் வெடித்தது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சில இடங்களில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் ஜூன் 13-ம் தேதி இரவு சோதனை நடத்தினர். இரவு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ஏஸ்எல்ஆர் (151), ஐஎன்எஸ்ஏஎஸ் (65), எல்எம்ஜி (12), ஏ.கே. (6) ரகம் உட்பட 328 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. இதுபோல, எஸ்எல்ஆர் (3,534), ஐஎன்எஸ்ஏஎஸ் (2,186), கையெறி குண்டுகள் (10) உட்பட 10,600 குண்டுகள் மீட்கப்பட்டன. இதுவரை ஒட்டுமொத்தமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக் கணக்கான குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in