விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு: மத்திய அரசு, போலீஸ், டாடா நிறுவன குழுக்கள் தீவிர விசாரணை

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 274 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த இடத்திலிருந்து நேற்று விமானத்தின் பாகங்களை ராட்சத கிரேன்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர். படம்: பிடிஐ
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 274 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த இடத்திலிருந்து நேற்று விமானத்தின் பாகங்களை ராட்சத கிரேன்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர். படம்: பிடிஐ
Updated on
2 min read

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274-ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை லண்டனுக்கு புறப்பட்ட போயிங் விமானம் சில நிமிடங்களில் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி தவிர விமானத்தில் இருந்து 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விமானம் வெடித்து சிதறியதால் பிஜே அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்த கோர விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 33 பேர் உயிரிழந்து இருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

இறந்த 33 பேரில் பெரும்பாலானவர்கள் பிஜே மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவப் படிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் சிலரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. அவர்கள் குறித்த தகவல்களையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர். அவர்களும் விமான விபத்தில் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் விமான விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீவிர விசாரணை: இந்நிலையில் விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதியில் ஏற்கனவே விமான போக்குவரத்து விசாரணைக் குழுவினர் தங்களது ஆய்வை தொடங்கி உள்ளனர். குஜராத் மாநில போலீஸாரும் தனியாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

அதேபோல விமானத்துக்குச் சொந்தமான டாடா குழுமமும் தனிக் குழுவை அமைத்து விசாரணையை நடத்தி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்நிலை விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவினரும் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த உயர்நிலைக்குழு அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் தீவிர ஆய்வை மேற்கொள்ளும். அதோடு விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து அறிக்கையாக தயார் செய்து அதை மத்திய அரசிடம் வழங்கும். இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துக்களை தடுக்க உயர்மட்ட குழு விசாரணை பரிந்துரை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

டிஎன்ஏ ஆய்வு: இதனிடையே, விமான விபத்தில் கருகிய நிலையில் மீட்கப்பட்டவர்களின் உடல்கள் டிஎன்ஏ மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சுமார் 52 பேரின் கருகிய உடல்கள் யாருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் எஞ்சியுள்ள உடல்களையும் அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு 72 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருப்புப் பெட்டி: விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு அதில் பதிவாகியுள்ள விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கருப்புப் பெட்டி, பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தின் மேற்பகுதியில் கிடைத்தது.

இதுகுறித்து குஜராத் மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுவரை 319 உடல் பாகங்கள் எடுத்து ஆய்வு அனுப்பியுள்ளோம். டிஎன்ஏ ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in