குஜராத் விமான விபத்தில் என்ன நடந்தது? - விமான போக்குவரத்து துறை விளக்கம்

விபத்து குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர்.
விபத்து குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர்.
Updated on
1 min read

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் என்ன நடந்தது என்பது பற்றி விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள், விமானம் விழுந்த விடுதியில் இருந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மத்திய அரசு சார்பில் நேற்று முதல் முறையாக விளக்கம் அளிக்கப்பட்டது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். சமீர் குமார் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்த புறப்பட்ட ஒரு நிமிடத்தில் மெஹானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. 650 அடி உயரத்துக்கு மேலே பறந்த விமானம், திடீரென கீழே இறக்கத் தொடங்கியது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு மதியம் 1.39 மணியளவில் ‘மேடே’ அவசர அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், பதில் இல்லை. விமான நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மெஹானி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமான விபத்து நடப்பதற்கு முன்பாக, அந்த விமானம் பாரீஸ் - டெல்லி - அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. அப்போது அதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இவ்வாறு சமீர் குமார் சின்ஹா கூறினார்.

அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகையில், ‘‘ அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கிவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். நானும் சாலை விபத்தில் என் தந்தையை இழந்துள்ளேன். அதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடியும். விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தின் உத்தரவுப்படி போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவில் இயங்கும் 34 ட்ரீம்லைனர் விமானங்களில் 8 விமானங்கள் ஏற்கெனவே ஆய்வில் உள்ளன’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in