அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாதங்கள் அவகாசம்: மத்திய அரசு

இடது: சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு | வலது: விமான விபத்து நிகழ்ந்த பகுதி.
இடது: சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு | வலது: விமான விபத்து நிகழ்ந்த பகுதி.
Updated on
2 min read

புதுடெல்லி: “அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்காக உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படும்” என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, “கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. குறிப்பாக அமைச்சகத்துக்கும், மற்ற அனைவருக்கும் மிகவும் கடினமான சூழல் இருந்தது. அகமதாபாத்தில் நடந்த சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் என் தந்தையையும் ஒரு சாலை விபத்தில் இழந்துவிட்டேன். எனவே ஓரளவுக்கு, குடும்ப உறுப்பினர்கள் உணரும் வலியையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடன் அது ஓர் அதிர்ச்சியான தருணம், ஆனால், அந்த அவநம்பிக்கையிலும் கூட, என்ன செய்ய வேண்டும், என்ன ஆதரவு தேவை என்பதை மேற்பார்வையிட நான் தனிப்பட்ட முறையில் சம்பவ இடத்துக்கு விரைந்தேன். நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, குஜராத் அரசு ஏற்கெனவே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.

நம்மிடம் உறுதியான பாதுகாப்புத் தரநிலைகள் உள்ளன. வலுவான நெறிமுறைகள் நாட்டில் உள்ளன. பாதுகாப்பை மேம்படுத்த நாங்கள் அனைத்தையும் செய்வோம். ஏற்கெனவே நமது பாதுகாப்பு அமைப்பு வலுவானது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை குடும்பங்களிடம் ஒப்படைக்க டிஎன்ஏ சோதனை நடந்து வருகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கறுப்புப் பெட்டியை டிகோட் செய்வது விபத்து குறித்த ஆழமான நுண்ணறிவை வழங்கும். கறுப்புப் பெட்டியை டிகோட் செய்வதன் மூலம் விமான விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றி அறிய முடியும்.

இந்த விமான விபத்து குறித்த விசாரணைக்காக உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும். அகமதாபாத் விமான விபத்தை அமைச்சகம் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்கிறது. நிலைமையை ஆய்வு செய்ய விமான விபத்து புலனாய்வுப் பணியக இயக்குநர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார். விமான விபத்து குறித்த தகவல்கள் புலனாய்வுப் பிரிவால் உடனடியாகத் திரட்டப்பட்டது” என்று கூறினார்.

உயிரிழப்பு 270 ஆக அதிகரிப்பு: கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். போயிங் 787-8 விமானம் வியாழன் மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த விமானம் விமான நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்தது. இதில், கல்லூரி விடுதி வளாகத்தில் இருந்தவர்களும் உயிரிழந்தனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 270 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in