Published : 14 Jun 2025 09:21 AM
Last Updated : 14 Jun 2025 09:21 AM
புதுடெல்லி: போயிங் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டிய ஜான் பார்னெட் என்பவரின் முந்தைய கருத்துகள் பொதுவெளியில் வைரலாகி வருகின்றன. 1962 பிப்ரவரி 23-ல் கலிபோர்னியாவில் பிறந்தவர் ஜான் பார்னெட். பெற்றோர் பிரிந்த பிறகு அவர் தனது தாயார் மற்றும் மூன்று சகோதரர்களுடன் லூசியானாவுக்கு குடிபெயர்ந்தார். நாசாவின் விண்வெளி ஓடத் திட்டங்களில் பணியாற்றியவர்.
பின்னர் 2010 மற்றும் 2017-க்கு இடையில் வடக்கு சார்லஸ்டன் போயிங் ஆலையில் தரக்கட்டுப்பாட்டு மேலாளராக பணிபுரிந்தார். அப்போதே அவர் போயிங் நிறுவனத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்ச்சியாக குறைந்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். குறைபாடுகளை கவனிக்காமல் உற்பத்தி இலக்கை மட்டும் அடைய ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
ஆபத்து காலத்தில் நான்கில் ஒரு ஆக்சிஜன் மாஸ்க் வேலை செய்யாமல் போகலாம் என்றும் ஜான் கவலை தெரிவித்திருந்தார். போயிங் கட்டுமானப் பணியின்போது சில பாகங்கள் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் இது மோசமான பாதுகாப்பு சோதனைகளை காட்டுவதாகவும் ஜான் பார்னெட் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக 2017-ல் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைப்பிடம் அவர் புகார் செய்ததைத் தொடர்ந்து அதனை சரி செய்ய போயிங் நிறுவனத்துக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், 2024 மார்ச் 9-ல் தெற்கு கரோலினாவின் சார்லஸ்டனில் உள்ள ஓட்டலுக்கு வெளியே தனது பிக்அப் டிரக்கில் ஜான் பார்னெட் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போயிங் வழக்கில் சாட்சியமளிக்க தயாரான நிலையில் ஜான் பார்னெட்டின் மரணம் அப்போது பல்வேறு யூகங்களை கிளப்பியது. அதேபோல போயிங் ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானதையடுத்து அவரின் பழைய கருத்துகள் வைரலாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT