Published : 14 Jun 2025 08:48 AM
Last Updated : 14 Jun 2025 08:48 AM
புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் ஆவார். அவர் அமர்ந்திருந்தது 11 ஏ என்ற எண்ணுள்ள இருக்கைதான். இந்த இருக்கையானது, ஐரோப்பிய நாடுகளில் இயக்கப்படும் 737 வகை போயிங் விமானங்களில் மிகவும் வெறுக்கப்படும் இருக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இயக்கப்படும் 787 போயிங் விமானங்களில் உள்ள 11 ஏ இருக்கையானது அதிர்ஷ்டமான இருக்கையாகப் பார்க்கப்படுகிறது.
போயிங் 787 விமானங்களில் 11ஏ என்ற எண்ணுள்ள இருக்கையானது, பெரும்பாலும், லக்சரி வகுப்புக்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும். அதாவது எகானமி வகுப்பு தொடங்கும் முதல் வரிசையில் முதல் இருக்கையாக ஜன்னலை ஒட்டி இந்த இருக்கை அமைந்திருக்கும். இந்த இருக்கையை ஐரோப்பிய விமானங்களில் பெரும்பாலானோர் விரும்புவதில்லை.
ஐரோப்பியாவில் போயிங் 737 எனப்படும் விமான ரகங்கள் இயக்கப்படுகின்றன. இந்த 737 விமானமானது, போயிங் 787-ஐப் போலவே இருக்கும். ஆனால் ஐரோப்பாவில் 11ஏ இருக்கையானது சரியான இடத்தில் அமைந்திருக்காது. மேலும், இருக்கையை மடக்கி தூங்குவதற்கு போதுமான வசதி இருக்காது. இதனால் பெரும்பாலான பயணிகள் இந்த இருக்கையைத் தவிர்த்து விடுவர். எனவே, அங்கு வெறுக்கப்படும் இருக்கையாக இது உள்ளது. ஆனால், அதே நேரத்தில்விஸ்வாஸ் குமார் ரமேஷுக்கு இந்த இருக்கைதான் அதிர்ஷ்ட இருக்கையாக அமைந்துவிட்டது. இந்த இருக்கையில் அமர்ந்தததால் விஸ்வாஸ் குமார் தப்பித்துள்ளார்.
இந்த 787 விமானங்களில் பயணிப்போர், அவசர காலங்களில் இந்த 11ஏ இருக்கையில் அமர்ந்திருப்பவர் மட்டும் வெகு விரைவாக விமானத்திலிருந்து தப்புவதாக நம்புகின்றனர். மேலும், அவசர வெளியேற்றத்துக்கான கதவுக்கு அருகே அமைந்திருப்பதும் ஒரு காரணமாகும். அதனால்தான் 787 விமானங்களில், இந்த 11ஏ அதிர்ஷ்டமான இருக்கையாக நம்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT