Last Updated : 13 Jun, 2025 06:28 PM

 

Published : 13 Jun 2025 06:28 PM
Last Updated : 13 Jun 2025 06:28 PM

கறுப்புப் பெட்டி மீட்பு: அகமதாபாத் விமான விபத்து விசாரணையில் அடுத்து என்ன?

அகமதாபாத்: விமானம் விபத்துக்குள்ளான பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவகக் கட்டிட கூரையிலிருந்து கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மட்டுமின்றி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான விபத்து புலனாய்வுப் பணியகமும் (AAIB), விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியது.

கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா 171 விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளான பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி உணவகக் கட்டிடத்தின் கூரையிலிருந்து கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. விமானம் பறக்கும் போது அது பற்றிய தகவல்களைப் பதிவு செய்யும் ஒரு சிறிய சாதனமான இந்த கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்வதன் மூலம் விபத்துக்கான காரணங்களை கண்டறிய முடியும்.

கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “விமானத் தரவுப் பதிவுக் கருவி (கறுப்புப் பெட்டி) அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து 28 மணி நேரத்திற்குள் AAIB ஆல் மீட்கப்பட்டது. இது விசாரணையில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது. இது சம்பவம் குறித்த விசாரணைக்கு கணிசமாக உதவும்.” என்று தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பெட்டி ஏன் முக்கியம்? - விமானத்தின் வால் பகுதியில் கறுப்பு பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் இதில் பதிவாகும். விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும். பெரும் தீ விபத்து, கடலில் மூழ்கினாலும் கறுப்பு பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாது. இதில் பதிவான தகவல்கள் மூலம் விமான விபத்துக்கான காரணம் தெரிய வரும்.

டிஜிசிஏ உத்தரவு: இதற்கிடையில், போயிங் 787-8 மற்றும் -9 விமானங்களில் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. ஜென்க்ஸ் என்ஜின்கள் பொருத்தப்பட்ட அனைத்து போயிங் 787-8 மற்றும் -9 விமானங்களிலும், புறப்படுவதற்கு முன் சோதனைகள் உட்பட கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டிஜிசிஏ ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x