“விஜய் ரூபானி கட்சி சித்தாந்தத்தில் உறுதியானவர்” - குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர்

விஜய் ரூபானி குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு
விஜய் ரூபானி குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு
Updated on
1 min read

அகமதாபாத்: விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தானும் விஜய் ரூபானியும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (ஜூன் 12) மதியம் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது குஜராத் அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார்.

இந்த பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி விஜய் ரூபானியின் குடும்பத்தினரையும் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், விஜய் ரூபானியுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில், "விஜய் ரூபானிஜியின் குடும்பத்தினரை சந்தித்தேன். விஜய் ரூபானி நம்மிடையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் அவரை பல பத்தாண்டுகளாக அறிவேன். மிகவும் சவாலான சில காலகட்டங்கள் உட்பட, நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றி உள்ளோம்.

விஜய் ரூபானி பணிவானவராகவும், கடின உழைப்பாளியாகவும், கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியானவராகவும் இருந்தார். பதவிகளில் உயர்ந்து, அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, குஜராத்தின் முதலமைச்சராக விடாமுயற்சியுடன் பணியாற்றியவர் அவர்.

ராஜ்கோட் மாநகராட்சியாக இருந்தாலும் சரி, மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தாலும் சரி, குஜராத் பாஜக தலைவராக இருந்தாலும் சரி, மாநில அரசில் கேபினட் அமைச்சராக இருந்தாலும் சரி, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பணியிலும் அவர் தன்னை தனித்துவமாகக் காட்டிக் கொண்டார்.

விஜய் ரூபானி குஜராத் முதல்வராக இருந்தபோது நானும் அவரும் விரிவாகப் பணியாற்றினோம். குஜராத்தின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். குறிப்பாக குஜராத் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். நாங்கள் நடத்திய சந்திப்புகளை எப்போதும் போற்றுவேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in