Published : 13 Jun 2025 03:07 PM
Last Updated : 13 Jun 2025 03:07 PM
அகமதாபாத்: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார். கணபதி பாப்பா (விநாயகப் பெருமான்) தான் தன்னை காப்பாற்றியதாக குரல் நடுநடுங்கக் கூறுகிறார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் விமானத்தில் பயணித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டதால் பூமி சவுகான் என்பவர் உயிர் பிழைத்திருக்கிறார்.
குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த பூமி சவுகான், லண்டனில் கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெற்றோரைப் பார்ப்பதற்காக இந்தியா வந்த பூமி சவுகான், நேற்று ஏர் இந்தியா விமானத்தில் லண்டனுக்குப் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்தார்.
விமான நிலையத்துக்குச் செல்ல நேற்று அவர் புறப்பட்டபோது அகமதாபாத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசலால் 10 நிமிடம் தாமதமாகிவிட்டது. அந்த விமானத்தில் சென்றே ஆக வேண்டும் என்பதற்காக அதிகாரிகளுடன் அவர் எவ்வளவோ பேசிப் பார்த்துள்ளார். எனினும், விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த பூமி சவுகான், “நான் 10 நிமிடத்தில் விமானத்தைத் தவறவிட்டேன். நான் கெஞ்சினேன், ஆனால் அவர்கள் என்னை ஏற அனுமதிக்கவில்லை. நான் மதியம் 1:30 மணியளவில் விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன். விமானம் சுமார் 1:38 மணியளவில் புறப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அது விபத்துக்குள்ளானது. நான் என்ன உணர்கிறேன் என்பதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை.
கடவுளுக்கு நன்றி. என் கணபதி பாப்பா என்னைக் காப்பாற்றிவிட்டார். என் உடல் உண்மையில் நடுங்குகிறது. என்னால் பேச முடியவில்லை. நடந்த அனைத்தையும் கேட்ட பிறகு என் மனம் இப்போது முற்றிலும் வெறுமையாக உள்ளது.
லண்டனில் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். 2 வரும் ஆகிவிட்ட நிலையில், குறுகிய விடுமுறையைப் பயன்படுத்தி நான் இந்தியா வந்தேன். இந்தப் பயணத்திற்காகவும், குடும்பத்தைப் பார்க்கவும், என் நாட்டின் காற்றை மீண்டும் சுவாசிக்கவும் நான் ஆவலுடன் காத்திருந்தேன். நான் விமான நிலையத்தில் இருந்து அப்படி வெளியேறுவேன் என நினைக்கவில்லை. ஆனால், அந்த பயணம் பலருக்கு இறுதியானதாக ஆகிவிட்டது. அவர்கள் யாரும் இதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இழப்பைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். அது நானாக இருந்திருக்கலாம். அது நானாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ காரணத்திற்காக, கடவுள் கணபதி பாப்பா என்னை காப்பாற்றிவிட்டார்.
நான் செய்தியைப் பார்த்தபோது... அதே விமான எண், அதே விமான நிலையம், அதே சேருமிடம்... என் கால்கள், கைகள் நடுங்க ஆரம்பித்தன. என் அம்மா என்னைப் பிடித்து அழுதார்.
நான் ஏன் காப்பாற்றப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னைக் காப்பாற்றியவர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT