Published : 13 Jun 2025 01:22 PM
Last Updated : 13 Jun 2025 01:22 PM
அகமதாபாத்: “விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருந்தேன்.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ், விமானம் மோதிய இடத்தில் இருந்ததால் காயமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடி நலம் விசாரித்துவிட்டுச் சென்ற பிறகு விஷ்வாஸ், தூர்தர்ஷனுக்குப் பேட்டி அளித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான அவர், பிரதமர் தன்னிடம் நலம் விசாரித்தது குறித்தும் தான் தப்பித்தது எவ்வாறு என்பது குறித்தும் விளக்கினார்.
“விமானம் புறப்பட்ட பிறகு, 5-10 வினாடிகளில் அனைத்தும் சிக்கிக் கொண்டது போல் நாங்கள் உணர்ந்தோம். விமானத்தில் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் இயக்கப்பட்டன. புறப்படுவதற்காக விமானத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டதாக நான் நினைத்தேன். அது கட்டிடத்தில் மோதியது. இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது.
நான் அமர்ந்திருந்த இடம் விமானம் மோதிய விடுதி பக்கத்தில் இல்லை. அது விடுதியின் தரைத் தளம். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் அமர்ந்திருந்த இடத்தில் அந்தப் பகுதி தரைத் தளத்தில் விழுந்தது.
சிறிது இடம் இருந்தது. என் கதவு உடைந்தவுடன், கொஞ்சம் இடம் இருப்பதைக் கண்டேன், பின்னர் நான் வெளியேற முயற்சித்தேன், நான் வெளியே வந்தேன். எதிர் பக்கத்தில் ஒரு கட்டிடச் சுவர் இருந்தது, விமானம் அந்தப் பக்கத்தில் முழுவதுமாக மோதியிருந்தது. அதனால் அந்தப் பக்கத்திலிருந்து யாரும் வெளியே வர முடியவில்லை. நான் இருந்த இடத்தில் மட்டுமே இடம் இருந்தது.
நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது, என் இடது கையும் எரிந்தது. பின்னர் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்குள்ளவர்கள் என்னை நன்றாக நடத்துகிறார்கள். இங்குள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது. நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை. உதாரணமாக, நானும் இறந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, நான் உயிருடன் இருந்தேன். நான் என் சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்தேன். எனது மாமா-அத்தை மற்றும் விமானப் பணிப்பெண்களின் உடல்கள் அங்கே இருந்தன.” என விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று (ஜூன் 12) குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.
தரையில் விழுந்த விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்லூரி மாணவர்கள் சிலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT