அகமதாபாத் விமான விபத்து பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு: காயமடைந்தோருக்கு நேரில் ஆறுதல்

படங்கள்: பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம்.
படங்கள்: பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம்.
Updated on
2 min read

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்துப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 13) காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று (ஜூன் 12) குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.

தரையில் விழுந்த விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்லூரி மாணவர்கள் சிலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ்வாஸ் குமாரை சந்தித்த பிரதமர் மோடி: இதற்கிடையில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் உயிர் பிழைத்த பயணி விஷ்வாஸ் குமாரை பிரதமர் நரேந்திர மோடி சிவில் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் அளித்தப் பேட்டியில், ‘‘கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை. மீட்பு படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்’’ என்று கூறியிருந்தார். இவர், டையூ பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணம் செய்துள்ளார்.

நேற்று விபத்து நடந்த பின்னர், அவர் நடந்து வந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து சென்ற காட்சி, வலைதளங்களில் வைரலானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in