பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேசினார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி கூறினார்.

வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார். பஹல்காம் தீவிரவாத தாக்குலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்திருந்த சூழலில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

பயணத்தின் முதல் கட்டமாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் சென்றடைந்த அவர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து பிரசல்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐரோப்பிய யூனியனின் தலைவர்களை அவர் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் நேற்று பயணத்தை தொடங்கிய எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், “பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடியின் வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்தேன். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவான வலுவான செய்திக்கு நன்றி தெரிவித்தேன். எங்களது நெருங்கிய நட்புறவின் நோக்கம் மற்றும் நம்பிக்கையை எங்கள் விவாதங்கள் பிரதிபலித்தன” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in