Published : 13 Jun 2025 08:01 AM
Last Updated : 13 Jun 2025 08:01 AM
அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரணம் என்ன? - விபத்து குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் கூறும்போது, “விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், தரையைவிட்டு பறக்க தொடங்கிய பிறகு, போதுமான உயரத்துக்கு மேலே எழும்பவில்லை. அடுத்த 2 நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமான சக்கரம் ஏதாவது கட்டிடம் மீது மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் பறவைகள் மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற காரணங்களால் விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும். விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கறுப்பு பெட்டி: விமானத்தின் வால் பகுதியில் கறுப்பு பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் இதில் பதிவாகும். விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும். பெரும் தீ விபத்து, கடலில் மூழ்கினாலும் கறுப்பு பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து, அதில் பதிவான தகவல்களை பெற 15 நாட்கள் வரை ஆகும். இதன்பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர். ‘இந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டால், விபத்து குறித்த விசாரணைக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது’ என்று அமெரிக்க விமான போக்குவரத்து துறை (எஃப்ஏஏ) தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT