Published : 13 Jun 2025 07:59 AM
Last Updated : 13 Jun 2025 07:59 AM
அகமதாபாத்: உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவியது.
அவர் கூறியபோது, “கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை. மீட்பு படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்” என்றார். இவர், டையூ பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்.
விமானத்தின் 11ஏ இருக்கையில் அவர் பயணம் செய்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த அவரது அண்ணன் அஜய் குமார் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT