விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி - டாடா குழுமம் அறிவிப்பு

விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி - டாடா குழுமம் அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதை டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டாடா குழும சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட தகவல்: ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்கள் துயரத்தை வெளிப்படுத்த எங்களிடம் வார்த்தைகள் இல்லை. தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள், காயமடைந்தவர்கள் சார்ந்தே எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்வோம். விபத்தில் சேதமடைந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தை புனரமைப்பதில் எங்களது பங்கு இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உரிமை டாடா குழுமத்தின் வசம் உள்ளது. கடந்த 2021-ல் இந்த நிறுவனத்தை டாடா குழுமம் ரூ.18,000 கோடிக்கு வாங்கியது. கடந்த 2022 முதல் ஏர் இந்தியா விமான நிறுவனம் டாடா குழுமத்தின் வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன? - விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 600+ அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, வெடித்து விபத்தில் சிக்கியது. விமானம் விழுந்த இடம் பி.ஜி மருத்துவக் கல்லூரி வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அங்கிருந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதை குஜராத் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. | முழுமையாக செய்திக்கு > அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்புகள் முதல் போயிங் நிறுவன விளக்கம் வரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in