Last Updated : 12 Jun, 2025 07:39 PM

1  

Published : 12 Jun 2025 07:39 PM
Last Updated : 12 Jun 2025 07:39 PM

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்த தகவலை மத்திய அமைச்சர் சி.ஆர் பாட்டீல் உறுதி செய்துள்ளார். தனது மகளை சந்திக்க அவர் இன்று மதியம் லண்டன் புறப்பட்டதாக தகவல். பிசினஸ் கிளாஸ் பிரிவில் அவர் விமானத்தில் பயணித்தார்.

68 வயதான அவர், குஜராத் மாநிலத்தின் 16-வது முதல்வராக கடந்த 2016 முதல் 2021 வரையில் பொறுப்பு வகித்தார். தற்போதைய குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தனது பதவியில் இருந்து அவர் விலகினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியது.

பாஜக நிறுவப்பட்ட 1980-ம் ஆண்டு முதல் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக உள்ளார். எமர்ஜென்சியை எதிர்த்த காரணத்துக்காக சிறை சென்றவர். 2006 முதல் 2012 வரையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். ராஜ்கோட் மாநகராட்சி மேயர், குஜராத் மாநில கேபினட் அமைச்சர் பொறுப்பிலும் இருந்தவர்.

ஏர் இந்தியா விமான விபத்து: விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 600+ அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, வெடித்து விபத்தில் சிக்கியது. விமானம் விழுந்த இடம் பி.ஜி மருத்துவக் கல்லூரி வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அங்கிருந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x