அகமதாபாத் விமான விபத்து: காயமடைந்தோரை காப்பாற்ற ரத்த தானம் வழங்க வேண்டுகோள்

அகமதாபாத் விமான விபத்து: காயமடைந்தோரை காப்பாற்ற ரத்த தானம் வழங்க வேண்டுகோள்

Published on

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் இன்று ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களின் உயிரை காக்க ரத்த தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA).

இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான விபத்து காரணமாக காயமடைந்த பி.ஜி மருத்துவக் கல்லூரியை சேர்ந்த சுமார் 60 எம்பிபிஎஸ் மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் உடல்நலன் சீராக உள்ளது. 4 முதல் 5 மாணவர்களை காணவில்லை.

மேலும், சூப்பர் ஸ்பெஷலிஷ்ட் மருத்துவர்கள் 3 முதல் 4 பேர் காணவில்லை என்றும், விமானத்தில் பயணித்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்து சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உயிரை காக்கும் வகையில் ரத்த தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் யு.என். மேத்தா இருதயவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சிவில் மருத்துவமனை, ஐ.கே.டி.ஆர்.சி மருத்துவமனை, குஜராத் புற்றுநோய் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள ரத்த தான மையங்களில் ரத்த தானம் செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து - நடந்தது என்ன? விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 600+ அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, வெடித்து விபத்தில் சிக்கியது. விமானம் விழுந்த இடம் பி.ஜி மருத்துவக் கல்லூரி வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அங்கிருந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in