உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2025: இந்தியா 131-வது இடத்துக்கு சரிவு

உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2025: இந்தியா 131-வது இடத்துக்கு சரிவு
Updated on
1 min read

புதுடெல்லி: உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025-ன்படி, ஆண்-பெண் பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. 146 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்தியா 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 129-வது இடத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் சமநிலை மதிப்பெண் 64.1 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசையில் தெற்காசியாவின் மிகக் குறைந்த தரவரிசை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பாலின இடைவெளி குறியீடு நான்கு முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பாலின சமத்துவம் அளவிடுகிறது. ஒன்று, பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, இரண்டு, கல்வி மூன்று, சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு, நான்கு, அரசியல் அதிகாரமளித்தல்.

இந்த அறிக்கையின்படி, இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் +0.3 புள்ளிகள் மேம்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு +.9 சதவீத புள்ளிகள் அதிகரித்து 40.7 சதவீதமாக உள்ளது.

கல்வியில், இந்தியா 97.1 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இது எழுத்தறிவு மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான பெண்களின் பங்குகளில் நேர்மறையான மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வு விஷயத்தில், மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் ஒட்டுமொத்தமாகக் குறைந்துள்ளது என்றும், எனினும், ஆரோக்கியமான ஆயுட்காலத்தில் ஆண் - பெண் இடையே சமத்துவம் நிலவுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரமளித்தல் விவகாரத்தில், இந்தியா சமத்துவத்தில் -0.6 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் 2025 இல் 14.7 சதவீதத்திலிருந்து 13.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், அமைச்சர் பதவிகளில் பெண்களின் பங்கு 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அரசியல் அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார பங்கேற்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன், தெற்காசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது. உலகளவில் 75 இடங்கள் முன்னேறி 24வது இடத்தை வங்கதேசம் பிடித்துள்ளது. நேபாளம் 125-வது இடத்திலும், இலங்கை 130-வது இடத்திலும், பூட்டான் 119-வது இடத்திலும், மாலத்தீவுகள் 138-வது இடத்திலும், பாகிஸ்தான் 148-வது இடத்திலும் உள்ளன.

உலகளாவிய பாலின இடைவெளி 68.8 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து தொடர்ந்து 16-வது ஆண்டாக தரவரிசையில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து பின்லாந்து, நார்வே, யுனைடெட் கிங்டம் மற்றும் நியூசிலாந்து உள்ளன.

உலகளாவிய பணியாளர்களில் 41.2 சதவீதத்தை பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இருந்தபோதிலும், உயர் தலைமைப் பதவிகளில் பெண்கள் 28.8 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளனர் என அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in