Published : 12 Jun 2025 07:42 AM
Last Updated : 12 Jun 2025 07:42 AM
ஜம்மு/ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் தங்கிய பிறகு புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் ஸ்ரீ நகருக்கு நேற்று திரும்பினார்.
முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா இதுகுறித்து கூறுகையில், “வைஷ்ணவி தேவி கோயிலில் சிறந்த தரிசனம் கிடைத்தது. அமைதி, முன்னேற்றம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்கான எங்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், நாம் மட்டுமின்றி நமது நாடும் முன்னேறிச் செல்லும். அதன் வளர்ச்சிப் பாதையில் நாமும் ஒரு பகுதியாக மாறுவோம்" என்றார்.
87 வயதான பரூக் அப்துல்லா, அவரது பேரன்கள் ஜமீர் மற்றும் ஜாஹித் ஆகியோருடன் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, ஜம்மு-காஷ்மீர் அமைச்சர் சதீஷ் சர்மா, முதல்வர் உமர் அப்துல்லாவின் ஆலோகர் நசீர் அஸ்லம் வானி ஆகியோர் உடனிருந்தனர்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை குறித்து அப்துல்லா கூறுகையில், “ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை வைஷ்ணவி தேவி கோயில் மட்டுமின்றி அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதனால் அதிக எண்ணிக்கையில் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இது காஷ்மீரின் சுற்றுலா துறையை மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகத்தையும் பெரிய அளவில் ஊக்குவிக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT