Published : 12 Jun 2025 07:08 AM
Last Updated : 12 Jun 2025 07:08 AM
புதுடெல்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேற்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும் வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பல முக்கிய நிகழ்ச்சிகளை பாஜக தொடங்கி உள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று ஜுன் 12 முதல் 14 வரை, விக் ஷித் பாரத் சங்கல்ப்சபை கூட்டங்கள், கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்திலும் சிறுபான்மையினரை கவரும் உத்தியை நேற்று முதல் பாஜக கையாள தொடங்கி உள்ளது. இதில், உ.பி.யின் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்துவாராக்கள் முன்பாக சவுபால் எனும் சிறப்புக் கூட்டங்களை பாஜக நடத்துகிறது. பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனை விளக்க விவாதங்கள் இதில் நடைபெற உள்ளன.
இவற்றில் குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முக்கிய அங்கம் வகிக்க உள்ளது.
இந்த கூட்டங்களில் உத்தர பிரதேச பாஜக சார்பில், பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனை விளக்க நூல்கள், அரசியலமைப்புச் சட்டம் குறித்த நூல்கள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளன.
இன்று ஜூன் 12-ம் தேதி, சிறுபான்மையினருக்காக, ‘முஸ்லிம்களுக்கான பிரதமர் மோடியின் செய்தி’ என்ற தலைப்பில் லக்னோவில் மாநாடு நடைபெறுகிறது. ஜுன் 21-ல் வரவிருக்கும் சர்வதேச யோகா தினத்தன்று இஸ்லாமிய மதரஸாக்களில் யோகா பயிற்சி நடைபெறும்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. பாஜக சிறுபான்மைப் பிரிவின் தலைவர் குன்வர் பாசித் அலி கூறுகையில், ‘‘மதரஸாக்களின் பல்வேறு தேர்வுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ‘தேஷ் கா பைகம், பிரதிபா கோ சம்மான்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பாராட்டப்பட உள்ளனர்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தாரும் பாராட்டப்படுவார்கள்’’ என்றார். பாஜக எம்.பி., எம்எல்ஏ.க்கள், மாநில தலைவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் இளம் திறமையாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT