Published : 12 Jun 2025 05:50 AM
Last Updated : 12 Jun 2025 05:50 AM

மாணவர் அம்மாவின் வங்கி கணக்கில் ரூ.15,000 - ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம்

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அம்மாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.15,000 கல்வி உதவித்தொகை செலுத்தும் நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவி வகிக்கிறார். இந்த கூட்டணி அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

‘சூப்பர் சிக்ஸ்’ வாக்குறுதிகள்: தேர்தலின்போது இக்கூட்டணி சார்பில் `சூப்பர் சிக்ஸ்' என்ற வாக் குறுதி அளிக்கப்பட்டது. அவற்றை ஒவ்வொன்றாக சந்திரபாபு நாயுடு அரசு அமல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே அண்ணா கேன்டீன், ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் திட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் அறிவித்த மற்றொரு வாக்குறுதி இன்று (ஜூன் 12) முதல் அமலுக்கு வரும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

ஆந்திர அரசு ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (இன்டர்மீடியட்) பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் மூலம் 67,27,164 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மட்டும், அவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த பள்ளிகளின் பதிவேட்டு பட்டியலின் அடிப்படையில் அவர்களின் தாயாருக்கு ரூ.15,000 பின்னர் வழங்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு வாழ்த்துகள்… ஆந்திர மாநில கல்வித் துறை அமைச்சர் லோகேஷ், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்தார். அப்போது ‘தாய்க்கு வந்தனம்’ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்து அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றான ‘தாய்க்கு வந்தனம்’ திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்பதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவர். இதனால் நான் தாய்மார்களுக்கு பாராட்டுகளையும், இன்று முதல் பள்ளிகளுக்குச் செல்ல உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

நிபந்தனைகள் என்ன? - இந்த திட்டத்தில் சில நிபந்தனைகளை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, வீட்டில் எத்தனை பேர் படித்தாலும் அனைவருக்கும் தலா ரூ.15,000 வீதம் வழங்கப்படும். ஆனால் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படித்தல் அவசியம். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் பயனளிக்கும்.

பள்ளிகளில் 75 சதவீதம் வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு மாணவ, மாணவிகளின் கல்விச் சான்றிதழ், ஆதார், தாய்மார்களின் வங்கிக் கணக்கு விவரம், தாயின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ், தேவைப்பட்டால் வருமானச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x