“பஹல்காம் தாக்குதல் பற்றி நாங்கள் எழுப்பும் 4 கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிப்பாரா?” - காங்கிரஸ்

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்
Updated on
2 min read

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதம் தொடர்பாக நாங்கள் எழுப்பும் 4 கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பாரா என்று ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “32 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட 7 நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களை பிரதமரே இப்போது சந்தித்துவிட்டதால், குறைந்தபட்சம் இப்போதாவது அவர் நாங்கள் முன்வைத்து வரும் இந்த 4 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா?

1. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திற்கு அல்லது கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான இந்தியாவின் எதிர்கால உத்தி தொடர்பாக அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவாரா?

2. பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை சவால்கள் குறித்து வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் முழுமையான விவாதம் நடத்த ஒப்புக்கொள்வாரா?

3. பூஞ்ச் ​​(டிசம்பர் 2023) மற்றும் ககாங்கிர் மற்றும் குல்மார்க் (2024) ஆகிய இடங்களில் ஏற்கனவே பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பஹல்காம் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவாரா?

4. ஜூலை 1999 இல் அமைக்கப்பட்ட கார்கில் மறுஆய்வுக் குழு போன்ற நிபுணர்கள் குழுவை அமைக்கவும், அவர்கள் ஆபரேஷன் சிந்தூரை விரிவாக பகுப்பாய்வு செய்து, எதிர்கால போர் குறித்த அதன் பரிந்துரைகளை வழங்குவார்களா? பொருத்தமான திருத்தங்களுக்குப் பிறகு, மறு ஆய்வுக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் மோடியிடம் நாங்கள் தொடர்ந்து 4 கேள்விகளைக் கேட்டு வருகிறோம், அவற்றுக்கு இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை. அவர் (பிரதமர் மோடி) எப்போது அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்? எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவர் எப்போது பேசுவார்? நாடாளுமன்றத்தில் நீங்கள் (பாஜக) 2 நாள் விவாதம் நடத்துவீர்களா? ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆய்வு செய்ய நீங்கள் (பாஜக) ஒரு குழுவை அமைப்பீர்களா? பஹல்காம் பயங்கரவாதிகள் எப்போது நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்?

இந்த கொடூரமான தாக்குதலை நடத்திய பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. டிசம்பர் 23-ல் பூஞ்ச் ​​தாக்குதலுக்கு அவர்கள்தான் காரணம். அக்டோபர் 24-ல் காங்கிரில் நடந்த தாக்குதலுக்கும் அவர்கள்தான் காரணம். அக்டோபர் 24-ல் குல்மார்க்கில் தாக்குதலிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் மறுக்கப்படாத செய்திகள். எனவே, இந்த பஹல்காம் பயங்கரவாதிகள் எப்போது நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்? பிரதமர் எம்.பி.க்களை சந்திப்பது சரி. அது அவரது தனிச்சிறப்பு. ஆனால் அவர் எப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கப் போகிறார்? வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இரண்டு நாள் விவாதத்தை எப்போது அறிவிக்கப் போகிறார்?” என ஜெயராம் ரமேஷ் கேள்வி எழப்பி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in