Published : 11 Jun 2025 12:53 PM
Last Updated : 11 Jun 2025 12:53 PM
புதுடெல்லி: விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜூன் 10 தேதியிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தலித், எஸ்டி, இபிசி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான குடியிருப்பு விடுதிகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது. பிஹாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதிக்கு சமீபத்தில் சென்றபோது, ஒரு அறையை 6-7 மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதைப் பார்த்தேன். சுகாதாரமற்ற கழிப்பறைகள், பாதுகாப்பற்ற குடிநீர், மெஸ் வசதிகள் இல்லாதது, நூலகங்கள் இல்லாதது, இணைய அணுகல் இல்லாதது ஆகியவை குறித்து மாணவர்கள் புகார் அளித்தனர்.
இரண்டாவதாக, விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களில் 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் தோல்வி அடைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிஹாரில் இதற்கான போர்டல் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படவில்லை. 2021-22 ஆம் ஆண்டில் எந்த மாணவருக்கும் உதவித்தொகை கிடைக்கவில்லை.
அதன்பிறகு கூட, உதவித்தொகை பெறும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. 2022-23 நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 1.36 லட்சமாக இருந்தது. 2023-24 இல் அது 69 ஆயிரமாகக் குறைந்தது. உதவித்தொகை தொகைகள் அவமானகரமான அளவில் குறைவாக இருப்பதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
பிஹாரில் இருந்து உதாரணங்களை நான் மேற்கோள் காட்டியிருந்தாலும், இந்தப் பிரச்சினைகள் நாடு முழுவதும் பரவலாக உள்ளன. இந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை நான் வலியுறுத்துகிறேன்.
தலித், பழங்குடியினர் (எஸ்டி), பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கான விடுதிகளை தணிக்கை செய்து நல்ல உள்கட்டமைப்பு, சுகாதாரம், உணவு மற்றும் கல்வி வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மேலும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய போதுமான அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும், 10-ம் வகுப்புக்குப் பிறகு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகளை சரியான நேரத்தில் வழங்கவும், உதவித்தொகையை அதிகரிக்கவும், மாநில அரசுகளுடன் நெருக்கமாக பணியாற்றவும் வேண்டும்.
விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னேறாவிட்டால் இந்தியா முன்னேற முடியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் நேர்மறையான பதிலை எதிர்நோக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT