Last Updated : 11 Jun, 2025 11:25 AM

 

Published : 11 Jun 2025 11:25 AM
Last Updated : 11 Jun 2025 11:25 AM

வால்மீகி ஊழல் வழக்கு: பல்லாரி எம்.பி, 2 எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பல்லாரி எம்.பி துக்காராம், பல்லாரி நகர எம்எல்ஏ நாரா பாரத் ரெட்டி, காம்ப்ளி எம்எல்ஏ ஜே.என்.கணேஷ் மற்றும் பல்லாரி கிராமப்புற எம்எல்ஏ நாகேந்திராவின் நெருங்கிய கூட்டாளி கோவர்தன் ரெட்டி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை இன்று (ஜூன் 11) சோதனை நடத்தி வருகிறது. வால்மீகி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.

பல்லாரி மாவட்டத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை இன்று காலை முதல் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

பல்லாரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் துக்காராம், பல்லாரி நகர காங்கிரஸ் எம்எல்ஏ நாரா பாரத் ரெட்டி, காம்ப்ளி, காங்கிரஸ் எம்எல்ஏ ஜே.என்.கணேஷ் மற்றும் பல்லாரி கிராமப்புற எம்எல்ஏ நாகேந்திராவின் நெருங்கிய கூட்டாளி கோவர்தன் ரெட்டி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. தற்போது இந்த இடங்களில் ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதேபோல கூட்லிகி காங்கிரஸ் எம்எல்ஏ. என்.டி ஸ்ரீனிவாஸின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்துகிறது. இன்று அதிகாலை 5 மணியளவில் கூட்லிகி தாலுகாவின் நரசிம்மகிரியில் உள்ள ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அந்த நேரத்தில் எம்எல்ஏவின் தாயார் மட்டுமே இருந்தார், வேறு யாருக்கும் உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை எதற்காக நடைபெறுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்தச் சோதனைகள் வால்மீகி மாநகராட்சி ஊழல் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்லாரி மக்களவைத் தேர்தலின் போது மாநகராட்சியின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வால்மீகி ஊழல்: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.187.3 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த ஊழலுக்கு உதவாததால் ஆணையத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜி சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கர்நாடக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து நடந்த சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் நாகேந்திராவை கைது செய்தனர்.

இதுதொடர்பான அமலாக்கத் துறையின் அறிக்கையில், காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான நாகேந்திரா தான் வால்மீகி முறைகேடு வழக்கில் முதல் குற்றவாளி மற்றும் இந்த முறைகேட்டின் மூளையாக செயல்பட்டவர். அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.43.33 கோடி உட்பட மொத்தம் ரூ.187 கோடி பணம் பின்னர் பல போலி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் ரூ.20.19 கோடி பல்லாரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x