Published : 11 Jun 2025 10:16 AM
Last Updated : 11 Jun 2025 10:16 AM
இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்த அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் அண்மைத் தகவலாக, கொலைக்குப் பின்னர் சோனம் இந்தூரில் தேவாஸ் நகா எனும் பகுதியில் மே 25 முதல் 27 வரை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியது தெரியவந்துள்ளது. இதனை இந்தூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை.
கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது. மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் தான், கொலை செய்துவிட்டு சோனம் இந்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 3 நாட்கள் தங்கியதாக இந்தூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காக அங்கே தங்கினார் போன்ற மேலதிக விவரங்களை மேகாலயா போலீஸார் விவரிப்பர் என்றும் இந்தூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மேகாலயா போலீஸார் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரான விஷால் சவுஹானின் இந்தூர் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து, கொலை நிகழ்ந்த நாளில் சவுஹான் அணிந்திருந்த ஆடையை இந்தூர் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதனை மேகாலயா போலீஸார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்புவர். அதில் ரத்தக் கறை போன்ற ஏதேனும் தடயங்கள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தப்படும் என்று இந்தூர் உதவி ஆணையர் பூணம்சந்திர யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சோனம் காதலராக அறியப்படும் குஷ்வாஹா சம்பவம் நடந்த தேதிகளில் இந்தூரிலேயே இருந்துள்ளார். தன்மீது எவ்விதமான சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்று அவர் தனது வழக்கமான பணிகளைச் செய்துள்ளார். 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த குஷ்வாஹா, ஒரு மரப் பொருட்கள் வியாபார தொழிற்சாலையில் கணக்காளராக இருந்துள்ளார்.
குற்றவாளியை அறைந்த பயணி: முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் மேகாலயா போலீஸ் இந்தூர் போலீஸார் உதவியுடன் விமானம் மூலம் ஷில்லாங் அழைத்துச் சென்றனர். 12 பேர் கொண்ட மேகாலாயா போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற போது இந்தூர் விமான நிலையத்தில் பயணி ஒருவர் குற்றவாளிகளில் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சோனம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT