Published : 11 Jun 2025 07:16 AM
Last Updated : 11 Jun 2025 07:16 AM
புதுடெல்லி / பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மற்றும் உறவினர்கள் 2 பேர் மீது நில முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகளும், லோக் ஆயுக்தா போலீஸாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறை கடந்த டிசம்பர் மாதம், இந்த வழக்குத் தொடர்பாக சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 143 அசையா சொத்துகளை முடக்கியது. இதை எதிர்த்து சித்தராமையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இதனிடையே, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் நிலம் ஒதுக்கிய வழக்கில் முதல்வர் சித்தராமையா தொடர்புடைய மேலும் 92 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை முதல்வர் சித்தராமையாவுக்குச் சொந்தமான ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறும்போது, ''நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் நான் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. என்னை அரசியல் ரீதியாகப் பழிவாங்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. அமலாக்கத் துறை அதிகாரிகள் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT