Published : 11 Jun 2025 01:01 AM
Last Updated : 11 Jun 2025 01:01 AM
புதுடெல்லி: ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் நவீனத்துவம், தன்னிறைவை பெறுவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். நேற்று முன்தினத்துடன் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தளத்தில் பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகம் குறித்து, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவும் பதிவிட்டு வருகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று கூறியுள்ளதாவது: கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறையை நவீனமாக்குவதிலும், தன்னிறைவு பெறுவதிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. பாதுகாப்புத் தளவாட உற்பத்தி தன்னிறைவை எட்டவேண்டும் என்ற பயணத்தில் நாம் தீவிரமாக இருக்கிறோம் என்பது பெருமிதம் கொள்ள வைக்கிறது.
இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பெல்லாம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ராணுவக் கருவிகளை இறக்குமதி செய்து வந்தோம். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்நிலை மாறியது. மாறாக, வெளிநாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 2014-25-ல் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.1,940 கோடியாக இருந்த நிலையில் 2024-25-ல் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறைக்குத் தேவையான கருவிகள், ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரித்து வருகிறோம். இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க முக்கிய மாற்றங்கள் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். பல்வேறு உலக நாடுகளுடன் ஆழமான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி நட்புறவை வலுப்படுத்தி இருக்கிறோம். மேலும் விண்வெளி ஆராய்ச்சி, பயணம் போன்ற வரலாற்றுச் சாதனைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.
மேலும் இந்தியாவிலேயே தயாரான உள்நாட்டு விமானத்தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பிரமாண்ட கப்பலை உருவாக்கியுள்ளோம். சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நிர்ணயித்து, நாடு தன்னம்பிக்கை கொண்ட புதுமைகளைத் தழுவி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT