Last Updated : 10 Jun, 2025 07:30 PM

6  

Published : 10 Jun 2025 07:30 PM
Last Updated : 10 Jun 2025 07:30 PM

‘தர்மா, கர்மா...’ - பஹல்காம் தாக்குதலையும், இந்திய பதிலடியையும் விவரித்த ராஜ்நாத் சிங்

டேராடூன்: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மதத்தைக் கேட்டுக் கொன்றனர். நாம் அவர்களின் 'தர்மா'வை கேட்கவில்லை. மாறாக, அவர்களின் கர்மாவை (செயல்) பார்த்து பதிலடி கொடுத்தோம்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பிரதமரின் தலைமையில், இந்தியாவின் ஒவ்வொரு பகுதி குறித்தும் நாங்கள் போதுமான கவனம் செலுத்தியிருந்தாலும், எல்லை மற்றும் மலைப்பகுதி மாநிலங்களின் வளர்ச்சியில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதற்குக் காரணம், நமது எல்லை மாநிலங்கள் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானவை.

நான் நாட்டின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளேன். இன்று பாதுகாப்பு அமைச்சராக சேவை செய்கிறேன். கடந்த 11 ஆண்டுகளில், உள்நாட்டுப் பாதுகாப்பாக இருந்தாலும், வெளிப்புற எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு என்பதாக இருந்தாலும், பிரதமர் மோடியின் தலைமையிலான நமது அரசு தேசிய பாதுகாப்பு வட்டத்தை இறுக்கி பலப்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு முறை இரண்டையும் நாங்கள் மாற்றியுள்ளோம்.

சமீபத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது உலகம் முழுவதும் இந்த மாற்றத்தைக் கண்டது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மதம் என்னவென்று கேட்டு மக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய விதம் முழு நாட்டையும் உலுக்கியது. அந்தத் தாக்குதல் நமது மக்கள் மீது மட்டுமல்ல, இந்தியாவின் சமூக ஒற்றுமையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல். இதற்கு எதிராக, இந்தியா பெரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் பிற தொடர்புடைய உள்கட்டமைப்புகளை அழித்தது. இந்திய வரலாற்றில் பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப் பெரிய நடவடிக்கை இதுவாகும்.

அவர்கள் மதத்தைக் கேட்டுக் கொன்றனர். நாம் அவர்களின் 'தர்மா'வை கேட்கவில்லை. மாறாக, அவர்களின் கர்மாவை (செயல்) பார்த்து பதிலடி கொடுத்தோம். பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்திருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். எனவே, பயங்கரவாதத்துக்கு எதிரான எச்சரிக்கை என்பது அரசாங்கங்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மட்டத்திலும் இருக்க வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன்.

பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மிகப் பெரிய 'சாபம்'. இது மனித நாகரிகத்தின் உயர் விழுமியங்களுக்கு எதிரி. நமது அமைதியான சகவாழ்வுக்கும் ஜனநாயகத்துக்கும் பயங்கரவாதம் ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். எந்த நாகரிக நாடும் இதை பொறுத்துக்கொள்ளாது. பயங்கரவாதம் என்பது ஒரு சிதைந்த மனநிலை. இது மனிதகுலத்தின் மீது விழுந்த கறை. முன்னேற்றப் பாதையின் ஒரு தடை. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது வெறும் பாதுகாப்பு பிரச்சினை மட்டுமல்ல, மனிதகுலத்தின் அடிப்படை விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். இது அனைத்து மனித விழுமியங்களுக்கும் எதிரான காட்டுமிராண்டித்தனமான சிந்தனைக்கு எதிரான போராட்டம்.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை, இது ஒரு இடைநிறுத்தம் ஓர் எச்சரிக்கை மட்டுமே. பாகிஸ்தான் மீண்டும் அதே தவறைச் செய்தால், இந்தியாவின் பதில் இன்னும் கடுமையாக இருக்கும், இந்த முறை, அது மீள்வதற்கான வாய்ப்பு கிடைக்காது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x