“இந்தியப் படைகளின் வீரத்தை அரசியலாக்க மோடியும் பாஜகவும் முயற்சி” - மம்தா பானர்ஜி சாடல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கொல்கத்தா: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக அவர் சாடினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு தவறியதற்காக பாஜக அரசு, ராஜினாமா செய்ய வேண்டும். இந்தக் கொடூரமான தாக்குதல் நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் தோல்வியை அம்பலப்படுத்துகிறது. நமது வீரர்கள் ஒப்பிடமுடியாத துணிச்சலைக் காட்டிய போதிலும், மீண்டும் மீண்டும் நிகழும் பாதுகாப்பு மீறல்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது?

26 பொதுமக்கள், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினரோ அல்லது காவல் துறையினரோ ஏன் இல்லை? 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது ஆயுதப்படைகளின் வீரத்தைப் பாராட்டி சட்டமன்றத்தில் நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். எனினும் அப்போது இது குறித்து தீர்மானத்தில் நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. அதற்கு மதம், சாதி இல்லை.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிக்கின்றன. பிரதமர் மோடி தன்னைப் பற்றி விளம்பரப்படுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த ராணுவ மோதலின் போது, ​​பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். ஒரு தேசிய துயரத்தை முதல்வர் அரசியலாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in