Published : 10 Jun 2025 04:26 PM
Last Updated : 10 Jun 2025 04:26 PM
புதுடெல்லி: மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், "மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக நிலவும் கவலைக்குரிய விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக எழுதுகிறேன். அரசியலமைப்பு ரீதியாக துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார். அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு மிகவும் முக்கியம். இரண்டு பதவிகளும் காலியாகும்போது, மற்றொருவர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பாரம்பரியமாக, புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையின் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்தலுக்கான நடைமுறை சபாநாயகர் தேர்வுக்கான நடைமுறையைப் போன்றதே. இதில் இருக்கும் ஒரே வித்தியாசம், துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பவர் சபாநாயகர் என்பது மட்டுமே. முதல் மக்களவை முதல் பதினாறாவது மக்களவை வரை, ஒவ்வொரு சபைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பொதுவாக, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களில் இருந்து துணை சபாநாயகரை நியமிப்பது மரபு.
எனினும், சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, இந்தப் பதவி கடந்த 17-வது மக்களவையிலும், தற்போதைய 18-வது மக்களவையிலும் காலியாகவே உள்ளது. இந்தப் பதவியை காலியாக வைத்திருப்பது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல. மேலும் அரசியலமைப்பின் நன்கு வடிவமைக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும். எனவே, கூடிய விரைவில், புதிய துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT