Published : 10 Jun 2025 04:23 PM
Last Updated : 10 Jun 2025 04:23 PM
பிரஸ்ஸல்ஸ்: பாகிஸ்தானின் பயங்கரவாத ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எந்த வகையிலும் பதிலடி கொடுக்கத் தயங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக பெல்ஜியம் நாட்டின் தலைநகரம் பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்தபோது, “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஆழமாக இருந்தால், நாங்கள் பாகிஸ்தானுக்குள் இன்னும் ஆழமாகச் செல்வோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரச கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில் மிகவும் மூழ்கியிருக்கும் ஒரு நாடு. அதுதான் இங்கே முழுப் பிரச்சினை. பயங்கரவாதத்துக்கான உறுதிப்பாட்டை பதற்றத்தின் ஆதாரம் என்று நீங்கள் அழைத்தால், அது நிச்சயமாக பதற்றம்தான்" என்று அவர் கூறினார்.
மேலும், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப் படைத் தாக்குதல்கள், பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்பை கடுமையாக சீரழித்துவிட்டன. வெளிப்படையாக சொன்னால் என்னைப் பொறுத்தவரை, ரஃபேல் இதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மற்ற அமைப்புகளும் பயனுள்ளதாக இருந்தன. இதற்கு சான்று பாகிஸ்தான் தரப்பில் அழிக்கப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட விமான நிலையங்கள்தான்.
மே 10-ஆம் தேதி ஒரே ஒரு காரணத்துக்காகவே மோதல் நிறுத்தப்பட்டது. அதாவது, 10-ம் தேதி காலையில் முக்கியமான 8 பாகிஸ்தான் விமான நிலையங்களையும் தாக்கி அவற்றை முடக்கினோம். நான் சொன்னதை கூட நம்ப வேண்டாம். கூகுளில் கிடைக்கும் பாதிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் ஹேங்கர்களின் படங்களை நீங்களே பார்க்கலாம்.
பாகிஸ்தான் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு திறந்தவெளியில் பயிற்சி அளித்து, அவர்களை இந்தியாவின் மீது கட்டவிழ்த்துவிடுகிறது. நாங்கள் இதனை சகித்துக்கொள்ள போவதில்லை. எனவே அவர்களுக்கு எங்கள் செய்தி என்னவென்றால், பஹல்காம் தாக்குதல் போல காட்டுமிராண்டித்தனமான செயல்களை நீங்கள் தொடர்ந்து செய்தால், பழிவாங்கப்படுவீர்கள். அந்தப் பழிவாங்கல் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதத் தலைமைக்கு எதிராக இருக்கும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT