Published : 10 Jun 2025 03:37 PM
Last Updated : 10 Jun 2025 03:37 PM
புதுடெல்லி: “ஒரு பெண் தனக்குப் பிடிக்காத திருமணத்துக்கு ‘நோ’ சொல்ல முடியாது, ஆனால், பிடிக்காத கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடியும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இவரைப் போன்ற முட்டாள்களை நம்பக் கூடாது. புத்திசாலிகள் சுயநலத்துக்காக பிறரை கெடுப்பதுண்டு. ஆனால், இவரைப் போன்ற முட்டாள்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. உங்களைச் சுற்றியிருக்கும் முட்டாள்தனங்கள் பற்றி எப்போதும் விழிப்புடன் இருங்கள்” என்று பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளையை கூலிப்படை வைத்து கொன்றதாக இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது காதலன் உள்ளிட்ட மேலும் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் பற்றியே கங்கனா ரனாவத் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு பெண் தனக்குப் பிடிக்காத திருமணத்துக்கு ‘நோ’ சொல்ல முடியாது. ஏனெனில் அவருகு அவரது பெற்றோர் மீது பயம். ஆனால், பிடிக்காத கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடியும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம்.
காலை முதலே இது என் புத்திக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. இதைக் கடந்து செல்ல முடியவில்லை. எனக்கு தலைவலியே வந்துவிட்டது. அந்தப் பெண்ணால் விவாகரத்து செய்திருக்கலாம் அல்லது காதலனுடன் சென்றிருக்கலாம். இது எத்தனை கொடூரமானது, எத்தனை அபத்தமானது, முட்டாள்தனமானது. இவரைப் போன்ற முட்டாள்களை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இவர்கள்தான் சமூகத்துக்கு பெரிய அச்சுறுத்தல். இவர்களைப் போன்றோரை பார்த்து நாம் கேலி செய்துவிட்டு, இவர்களால் என்ன ஆபத்து இருக்கப் போகிறது என்று குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். புத்திசாலிகள் சுயநலத்துக்காக பிறரை கெடுப்பதுண்டு. ஆனால், இவரைப் போன்ற முட்டாள்களுக்கு தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. உங்களைச் சுற்றியிருக்கும் முட்டாள்தனங்கள் பற்றி எப்போதும் விழிப்புடன் இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நடந்தது என்ன? - மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11-ம் தேதி திருமணம் ஆனது. இதையடுத்து புதுமணத் தம்பதி தங்கள் தேனிலவை கொண்டாட மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு சென்றனர். கடந்த மே 23-ம் தேதி, மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் நாங்ரியட் கிராமத்தில் உள்ள விடுதியில் இருந்து வெளியேறிய இவர்களை பிறகு காணவில்லை.
இதையடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மேகாலயா போலீஸார் இத்தம்பதியை தேடினர். இதில் 24-ம் தேதி இத்தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டரை சோராரிம் என்ற கிராமத்தில் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் 200 அடி ஆழ பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீஸார், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரகுவன்சியின் செல்போன் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர். இதையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என்ற கேள்வி எழுந்தது.
சுற்றுலா கைடு கொடுத்த ‘துப்பு’ - முன்னதாக இத்தம்பதியினர் காணாமல்போன நாளில் அடையாளம் தெரியாத 3 ஆண்களுடன் சோனம் காணப்பட்டதாக உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூறியிருந்தார். ஆனால் நால்வரும் இந்தியில் பேசியதால் என்ன பேசினார்கள் என்று தனக்கு புரியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் விசாரணையை போலீஸார் துரிதப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு உ.பி.யில் இருந்து சோனம் அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இதையடுத்து அவரது இருப்பிடத்தை காசிப்பூர் அறிந்த போலீஸார், வாராணசி - காசிப்பூர் சாலையில் ஒரு உணவகத்தில் இருந்த அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக ஆசைப்பட்டு சோனம் கூலிப்படை அமைத்து ரகுவன்சியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இக்கொலையில் தொடர்புடைய ஆகாஷ் ராஜ்புத் (19), விஷால் சிங் (22), ராஜ் குஷ்வாகா, ஆனந்த் சிங் குர்மி (23) உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT