தீ விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்: 18 பணியாளர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை

தீ விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்: 18 பணியாளர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை
Updated on
1 min read

மங்களூரு: கொழும்பில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் இருந்த 22 பணியாளர்களில் 18 பேரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான எம்வி வான் ஹை 503, கொழும்பில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் நேற்று (ஜூன் 9) கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 78 கடல் மைல் தொலைவில் இருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது.

இது குறித்த தகவல் இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐஎன்எஸ் சூரத் கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்தது. கப்பலில் இருந்த 22 பணியாளர்களில் 4 பேர் கடலில் காணாமல் போன நிலையில், மீதமுள்ள 18 பேரை மீட்டு நேற்று இரவு 10.45 மணிக்கு நியூ மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த சம்பவம் குறித்த விவரங்களை அளித்துள்ள மங்களூரு காவல் ஆணையரகம், “ஐஎன்எஸ் சூரத்தில் இருந்த பணியாளர்களில் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில், இருவர் படுகாயங்களுடனும் 4 பேர் லேசான காயங்களுடன் இருந்தனர். படுகாயமடைந்தவர்களின் பெயர்கள் லு யான்லி மற்றும் சோனிதூர் ஹேனி.

லேசான காயமடைந்தவர்களின் பெயர்கள் சூ ஃபபாவோ, குவோ லினினோ, தெய்ன் தான் ஹ்டே மற்றும் கீ சாவ் ஹ்டூ.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற பணியாளர்கள் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களின் பெயர்கள் வெய் சுன்-ஜு, டேக் பெங், கான் ஹியூ வால், லின் சுன் செங், ஃபெங் லி, லி ஃபெங்குவாங், தெட் ஹுட் ஸ்வே, குவோ எர்ச்சுன், ஹோலிக் அஸ்யாரி, சு வெய், சாங் ரென்-ஹான் மற்றும் வு வென்-சி.

கடலில் காணாமல் போனவர்கள் யூ போ-ஃபாங், சான் வின், ஜெய்னல் அபிடின் மற்றும் ஹ்சி சியா-வென்.

மீட்கப்பட்டவர்களில், எட்டு பேர் சீனர்கள், நான்கு பேர் தைவான் நாட்டினர், நான்கு பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

காயமடைந்தவர்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக துறைமுகம் மற்றும் காவல்துறையால் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in