உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்சம் துறைமுகம் வருகை

விழிஞ்சம் துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பல் எம்எஸ்சி ஐரி​னா. படம்: பிடிஐ
விழிஞ்சம் துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பல் எம்எஸ்சி ஐரி​னா. படம்: பிடிஐ
Updated on
1 min read

கொச்சி: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்எஸ்சி ஐரினா, கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தது. . உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்று எம்எஸ்சி ஐரினா.

இது 24,346 டிஇயு (20 அடிக்கு சமமானது) திறன் கொண்டது. 26 அடுக்குகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பல் நேற்று காலை 8 மணியளவில் கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் வந்தடைந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது இன்று வரை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும். பொறியியலின் அதிசயம் என்று போற்றப்படும் இது, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே சரக்கு பரிமாற்றத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வளவு பெரிய கப்பல் இந்தியாவின் துறைமுகம் ஒன்றில் நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இந்த நிகழ்வு, மிகப்பெரிய சரக்கு போக்குவரத்தை கையாள விழிஞ்சம் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இதுகுறித்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “எம்எஸ்சி ஐரினா கப்பலை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன். இந்தக் கப்பல் தெற்கு ஆசிய கடல் பகுதிக்கு முதல் முறையாக வந்துள்ளது. இந்த நிகழ்வு விழிஞ்சம் துறைமுகத்துக்கு ஒரு மைல் கல் ஆகும். அதுமட்டுமல்ல, உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாகவும் உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எக்கனாமிக் நிறுவனமும் (ஏபிஎஸ்இஇசட்) கேரள அரசும் இணைந்து, விழிஞ்சம் பகுதியில் சர்வதேச கடல் துறைமுகத்தை கட்டி உள்ளன. ரூ.8,900 கோடி செலவில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுள்ள இதை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 2-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதுவரை நாட்டின் 75% சரக்கு பரிமாற்ற நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்கள் மூலம் நடைபெற்றன. இதனால் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில்தான் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் இந்த விழிஞ்சம் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றி வரும் வரும் பெரிய கப்பல்கள் இனி விழிஞ்சம் துறைமுகம் வந்தடையும். இதனால் செலவு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in