Published : 10 Jun 2025 08:28 AM
Last Updated : 10 Jun 2025 08:28 AM
துங்கர்பூர்: ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் கலந்தூர் என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வழக்கப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம்.
முறைப்படி திருமணம் செய்து கொள்வது கட்டாயம் அல்ல. அதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமா பாய் கராரி (95) என்பவரும், ஜீவாலி தேவி (90) கடந்த 70 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 8 குழந்தைகள், மற்றும் பல பேரக்குழந்தைகள் உள்ளனர்.
முறைப்படி திருமணம் செய்து கொள்ளாத தம்பதியினர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற கட்டுப்பாடு மட்டும் இந்த பழங்குடியினர் சமுதாயத்தில் உள்ளது. அதனால் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ராமா பாய் கராரிக்கும், ஜீவாலி தேவிக்கும் ஏற்பட்டது. இதனால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும்படி பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் வற்புறுத்தினர். இதனால் முறைப்படி திருமணம் செய்து கொள்ள தாத்தா - பாட்டி தம்பதி சம்மதித்தது. இவர்களது திருமணத்தை தடபுடலாக கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 1-ம் தேதி அன்று திருமணத்துக்கு முந்தைய ஹால்தி, பந்தோலி நிகழ்ச்சிகள் மேளதாளம் முழங்க ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன. திருமணம் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த கிராமத்தினரும் கலந்து கொண்டு ஆடி பாடி கொண்டாடி, விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என ராமா பாயின் மகன் கந்தி லால் கராரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT