சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது: பஹல்காம் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு

பஹல்காமில் குதிரை சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
பஹல்காமில் குதிரை சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

பஹல்காம்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பஹல்காம் பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. எனவே அப்பகுதிவாசிகள் குதிரைகள் மூலம் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருமானம்தான் அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. சுமார் 6 ஆயிரம் குதிரைகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பஹல்காமிலிருந்து பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஒரு நபரை குதிரையில் அழைத்துச் செல்ல ரூ.1,300 வசூலிக்கின்றனர். அதேநேரம், பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, டபியாயின் ஆகிய 4 பகுதிகளுக்கும் சேர்த்து அழைத்துச் செல்ல ரூ.2,400 வசூலிக்கின்றனர். சில நேரங்களில் இந்த கட்டணம் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிப்பது உண்டு.

கோடைகாலத்தில் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் செல்வது உண்டு. இந்நிலையில், பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. மொத்தம் சுமார் 6 ஆயிரம் குதிரைகள் உள்ள நிலையில் வெறும் 100 குதிரைகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தும் நிலை உள்ளது.

ஒரு குதிரையின் விலை சுமார் ரூ.1 லட்சமாக உள்ளது. ஒரு குதிரைக்கு உணவு வழங்க தினமும் குறைந்தபட்சம் ரூ.400 செலவிட வேண்டி உள்ளது. இதன் காரணமாக குதிரையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு தினமும் ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in