தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஒடிசா ஐஏஎஸ் அதிகாரி கைது

தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஒடிசா ஐஏஎஸ் அதிகாரி கைது
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசாவில் காலஹந்தி மாவட்டத்தில் தொழிலதிபரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரியை விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

2021 ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான திமான் சங்மா திரிபுராவைச் சேர்ந்தவர். அகர்தலாவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக், பட்டம் முடித்தவர். . இவர் காலஹந்தி மாவட்டத்தின் தரம்நகர் துணை ஆட்சியராக உள்ளார். உள்ளூர் தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக துணை ஆட்சியர் திமான் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த தொழிலதிபர் இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் துணை ஆட்சியர் தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லதுக்கு அந்த தொழிலதிபரை வரவழைத்து முன் லஞ்சமாக ரூ.10 லட்சத்தை பெற்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் திமான் சிங்கை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையிலிருந்து ரூ.47 லட்சம் ரொக்கத்தை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

துணை ஆட்சியர் மீது ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் 2020 பிரிவு 7-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஜிலென்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒடிசா விஜிலென்ஸ் துறை 2024-ம் ஆண்டில் 211 குற்ற வழக்குளை பதிவு செய்து 179 அரசு அதிகாரிகள் மற்றும் பிற நபர்களை கைது செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in