சுஹாஸ் ஷெட்டி கொலை விவகாரம் | சித்தராமையா அரசு இந்து விரோதமானது என பாஜக குற்றச்சாட்டு

சுஹாஸ் ஷெட்டி கொலை விவகாரம் | சித்தராமையா அரசு இந்து விரோதமானது என பாஜக குற்றச்சாட்டு
Updated on
1 min read

பெங்களூரு: சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்து விரோதமானது என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் பஜ்ரங் தள செயற்பாட்டாளர் சுஹாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய விஜயேந்திரா, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். சித்தராமையா அரசின் திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, இதுவரை இதற்காக எந்த அமைப்பு அல்லது தேச விரோத சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்திய சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில், சுஹாஸ் ஷெட்டியின் வீட்டுக்கு உள்துறை அமைச்சர் செல்வதை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சித்தராமையா அரசு இந்து விரோதமானது.

இந்தக் கொலை தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கர்நாடக ஆளுநரைச் சந்தித்தனர், நாங்கள் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினோம், அதை மாநில அரசு ஏற்கவில்லை. ஆனால் மத்திய அரசு அதிர்ஷ்டவசமாக ஒப்புக்கொண்டது" என்று அவர் கூறினார்.

கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் பஜ்ரங் தளத்தின் இளைஞர் பிரிவு தலைவரான சுஹாஸ் ஷெட்டி(30), கடந்த மாதம் தட்சிண கன்னடா மாவட்டத்தின் சுலியா நகரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரவில் தாமதமாக வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. இது திட்டமிட்ட கொலை என பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் குற்றம் சாட்டின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in