Last Updated : 08 Jun, 2025 10:44 AM

2  

Published : 08 Jun 2025 10:44 AM
Last Updated : 08 Jun 2025 10:44 AM

‘நான் இங்கேயே இருந்து விடுகிறேன்’ - நெரிசலில் உயிரிழந்த மகனின் கல்லறையில் தந்தை உருக்கம்

ஹாசன்: கடந்த புதன்கிழமை பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்‌ஷ்மண் என்ற இளைஞரும் ஒருவர். அவரது கல்லறையில் இருந்து விலக மனமில்லாத அவரது தந்தை பி.டி.லக்‌ஷ்மண், ‘நான் இங்கேயே இருந்து விடுகிறேன்’ என கதறி அழுதது பலரையும் கலங்க செய்துள்ளது.

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் முதல் முறையாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களுருவில் விதான சவுதா மற்றும் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதை காண லட்ச கணக்கான மக்கள் இரண்டு இடங்களிலும் குவிந்தனர்.

இதில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் இருந்து ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் மக்கள் நுழைய முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதில் மூன்று பேர் பதின்ம வயதினர் (டீன்-ஏஜ்), 20 முதல் 35 வயது வரையிலான இளம் வயதினரும் இந்த நெரிசலில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பூமிக் லக்‌ஷ்மணின் இறுதி சடங்கு நடைபெற்றது. அவருக்காக அவரது அப்பா பி.டி.லக்‌ஷ்மண் வாங்கிய நிலத்தில் பூமிக்கின் உடல் புதைக்கப்பட்டது.

“நான் இங்கிருந்து வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை. நான் இங்கேயே இருந்து விடுகிறேன். நான் எனது மகனுக்காக வாங்கிய இடத்தில் அவனது நினைவகம் எழுந்துள்ளது. எனது மகனுக்கு நடந்து வேறு யாருக்கும் நடக்க கூடாது. எனது நிலை எந்தவொரு தந்தைக்கும் வரக்கூடாது” என மகனின் கல்லறையை விட்டு விலக மனமின்றி பி.டி.லக்‌ஷ்மண் கதறி அழுதார். அவருக்கு உள்ளூர் மக்கள் ஆறுதல் சொல்லியும் தேற்ற முடியாத நிலை. இது வீடியோ காட்சியாக சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் தரப்புக்கு அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x