Published : 08 Jun 2025 08:09 AM
Last Updated : 08 Jun 2025 08:09 AM
தீவிரவாதிகளுக்கு எதிராக துணிச்சலாகப் போராடி தனது உயிரை தியாகம் செய்தவர் குதிரைத் தொழிலாளி சையத் ஆதில் ஷா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கத்ரா- ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலின்போது தீவிரவாதிகளை எதிர்த்து நின்ற ஒரே வீரர் குதிரையேற்ற வீரரா சையத் ஆதில் ஷா. வயிற்றுப்பிழைப்புக்காக சுற்றுலாப் பயணிகளை தனது குதிரையில் ஏற்றிச் சென்று மகிழ்விக்கும் தொழிலை செய்து வந்தார்.
தீவிரவாதிகள் சுட்டதில் அவரும் உயிரிழந்தார். தீவிரவாதிகளைக் கண்டு பயப்படாமல் எதிர்த்து துணிச்சலாகப் போராடியவர் அவர். அவரது துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.
அந்த தீரமிக்க இளைஞன், தனது குடும்பத்தினரின் வாழ்க்கைக்காக சுற்றுலாப் பயணிகளை குதிரைகளில் ஏற்றி ஊதியம் ஈட்டி வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தீவிரவாதிகளின் தாக்குதலில் அவர் இறந்துவிட்டார். இறக்கும்நிலையிலும் தைரியமாக தீவிரவாதிகளை எதிர்த்து நின்றார்.
ஜம்மு காஷ்மீர் மக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தீவிரவாதத்தின் மூலம் இந்த பிராந்தியத்தின் வளர்ச்சியைத் தடுக்க சில சக்திகள் முயல்கின்றன. அது ஒருபோதும் வெற்றிபெறாது. இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து ஆதில் ஷாவின் தம்பி சையத் நவ்ஷாத் கூறும்போது, “நமது நாட்டின் பிரதமர் மோடி, எனது சகோதரர் சையத் ஆதில் ஷாவின் தியாகத்தை அங்கீகரிப்பது எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரிய விஷயமாக உள்ளது. நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். துணிச்சலாகப் போரிட்டு உயிரிழந்த ஆதில் ஷா, தியாகியாக மாறி எங்களைப் பெருமைப்படுத்தி விட்டார். பிரதமர் மோடியின் பேச்சு எங்களை உத்வேகப்படுத்தி உள்ளது" என்றார்.
சையத் நவ்ஷாத் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT