Published : 08 Jun 2025 08:06 AM
Last Updated : 08 Jun 2025 08:06 AM
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் தொடர் என்கவுன்டர் சம்பவங்களில் இரு முக்கிய தலைவர்கள் உட்பட 7 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசியப் பூங்காவின் அடந்த வனப் பகுதிக்குள் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: கடந்த 3 நாட்களில் நடைபெற்ற தொடர் என்கவுன்ட்டர் சம்பவங்களில் 2 பெண்கள் உட்பட 7 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் நரசிம்மாசலம் என்கிற சுதாகர், பாஸ்கர் என்கிற மைலரபு அடெல்லு ஆகியோர் முக்கிய தலைவர்கள் ஆவர்.
இவர்களில் சுதாகர் பற்றிய தகவலுக்கு ரூ.40 லட்சமும் பாஸ்கர் பற்றிய தகவலுக்கு ரூ.45 லட்சமும் கூட்டு வெகுமதியாக சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தன. சுதாகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நடமாட்டம் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் கடந்த 4-ம் தேதி தேடுதல் வேட்டை தொடங்கினர். என்கவுன்ட்டரில் இறந்த மற்ற 5 நக்சலைட்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சம்பவ இடத்திலிருந்து இருஏகே-47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அங்கு நக்சலைட்களை தேடும் பணி தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சத்தீஸ்கரில் கடந்த 3 வாரங்களில் நக்சலைட்களுக்கு எதிரான 3-வது மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT